தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி 2018 மே 22ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும் பொது, தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
ஆணையத்தின் இடைக்கால அறிக்கை முதலமைச்சர் ஸ்டாலினிடம் மே 14ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையை அரசு கவனமாக பரிசீலித்தது. இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டெர்லைட் வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று மே 21ஆம் தேதி அறிவித்தார். அந்த அறிவிப்பின் படி, மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளை தவிர 38 வழக்குகளை திரும்பப் பெற்றிட உத்தரவிட்டுள்ளார்.
மேலும் போராட்டத்தில் தொடர்புடைய அரசியல் கட்சிகளின் தலைவர்களான சிபிஐ மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர் நல்லகண்ணு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஎம் மாநில பொதுச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக மாநில மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக மாநில துணைச் செயலாளர் சுதீஷ் உள்ளிட்ட 13 பேர் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற்றிட உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் - முதலமைச்சர்