சென்னை: வரும் ஜூன் 3 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது உட்கட்சித் தேர்தல் குறித்து பேசிய அவர், "உட்கட்சி தேர்தலில் சில இடங்களில் தேர்தல் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் செய்த தவறுகள், மாவட்ட செயலாளர்களின் தவறுகள் குறித்து முழுமையான அறிக்கை என்னுடைய கவனத்திற்கு வந்திருக்கிறது.
தவறுகளைச் செய்தவர்கள் யார் யார் என்று எனக்குத் தெரியும். தவறு செய்தவர்களின் மனச்சாட்சிக்கும் தெரியும். கட்சித் தலைமை நிர்வாகிகளின் விசாரணைக்கு பிறகு நடவடிக்கைகள் நிச்சயமாக மேற்கொள்ளப்படும். இனி நடைபெறவிருக்கும் உட்கட்சித் தேர்தலை மிகக் கவனமாகவும், நேர்மையாகவும் நடத்திட வேண்டும் என்பதில் கட்சித் தலைமை நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் உறுதியாக இருக்க வேண்டும்" என்றார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி முதல், தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி, திமுக ஆட்சியின் சாதனைகளையும், திமுகவின் வரலாற்றையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.