சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் இணைந்து நடத்தும் விளையாட்டு வீரர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார். அப்போது முதலமைச்சர் முன்னிலையில் வீரர்கள் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டின் சார்பாக பங்கேற்கும் நேத்ரா, வருண், கணபதி, மாரியப்பன், பவானி தேவி, உள்ளிட்டோருக்கு அரசின் சிறப்பு ஊக்கத்தொகையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
இளமைக்கால நினைவுகள் :
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், "நான் பள்ளி, கல்லூரி படிக்கும் போது விளையாட்டு போட்டிகளில் ஆர்வமாக கலந்து கொள்வேன். சென்னை மேயராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்த போது சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்களோடு காட்சி போட்டிகளில் (exhibition match) விளையாடியுள்ளேன்" என்று தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "வாழ்க்கையே விளையாட்டுதான். சில பேர் விளையாட்டாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். விளையாட்டுத் துறையில் விளையாட்டுத்தனமாக இருக்கக்கூடாது. ஊக்கத்தோடு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்" என வீரர்களை கேடடுக்கொண்டார்.
மேலும், "ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வீரருக்கு 3 கோடி ரூபாயும், வெள்ளி வெல்லும் வீரருக்கு 2 கோடி ரூபாயும், வெண்கலம் வெல்லும் வீரருக்கு 1 கோடி ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்" என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.
இதையும் படிங்க:+2 பொதுத்தேர்வு: மதிப்பெண் வழங்கும் முறை அறிவிப்பு