சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணையை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஜனவரி 26ஆம் தேதி வெளியிட்டது.
அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மாநகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி வார்டு உறுப்பினர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் ஜன.28ஆம் தேதி முதல் பிப்.4ஆம் தேதிவரை பெறப்பட்டுள்ளன.
வேட்புமனு திரும்பப் பெறுவதற்கு இன்று (பிப். 7) மாலை 3 மணிவரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், வேட்பாளர் இறுதிப்பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும்.
இந்நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், சட்டம் ஒழுங்கு குறித்தும் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறை செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விரிவான விளக்கங்கள் வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.
இதையும் படிங்க: நீட் விலக்கு விவகாரம்: ஆளுநரின் டெல்லி பயணம் திடீர் ரத்து