அதிமுகவின் மாவட்ட பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களின் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (நவம்பர் 20) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவின் செயல்பாடுகள், மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகை, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
![admk meeting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-8a-admkmeeting-7209106_20112020201243_2011f_1605883363_16.jpg)
அப்போது முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், "தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் அதிமுக அரசு செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறலாம். குறிப்பாக, நீட் விவகாரத்தில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி அதிமுக செய்த சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கடினமாக உழைத்தால் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கலாம்.
நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை கண்டு துவண்டு விடாமல், இடைத்தேர்தலில் பணியாற்றியது போல நாம் செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வெற்றி பெற உழைக்க வேண்டும்" என்றார்.