முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அவர் பிரதமரிடம் வழங்கினார். இதில், கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டும், இதுவரை அது தொடங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நதிநீர் இணைப்பின் மூலம் தமிழகம் உள்பட தென் மாநிலங்கள் பயன்பெறும் என்பதால் இதனை உடனடியாக தொடங்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், தமிழகத்தின் வறட்சி மாவட்டங்களுக்கு உதவும் வகையில், காவிரி - குண்டாறு திட்டத்தை உடனடியாக தொடங்கவும், அதற்கு நிதி உதவி செய்யவும் முதலமைச்சர் கோரியுள்ளார். 'நமாமி கங்கே' திட்டத்தின் கீழ் காவிரி நதியை தூய்மைப்படுத்த மத்திய ஜல்சக்தி துறை உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்றும், இதற்காக 713 கோடி ரூபாய் நிதி அளிக்க வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். இத்திட்டப்படி, காவிரியின் கரையோரப் பகுதியில் உள்ள திடக்கழிவுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள தொழிற்சாலைகளின் கழிவுநீர் ஆகியவற்றைத் தடுத்து நிறுத்தி, அதனை முறையாக மறுசுழற்சி செய்ய திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசு 50% நிதி பங்களிப்பு அளிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வரும் நிலையில், இதனை உடனடியாக வழங்கவும் பிரதமரிடம் அளித்துள்ள கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கோவையிலிருந்து துபாய்க்கு நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், சென்னையிலிருந்து சேலத்துக்கு இரவு நேர விமானங்கள் இயக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். தற்போது சென்னை - சேலம் இடையே காலை நேர விமானங்கள் மட்டுமே உள்ளன. அண்மையில், சேலம் விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்குவதற்கான பணிகளை விமான போக்குவரத்து ஆணையம் முடித்துள்ள நிலையில், முதலமைச்சர் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
நிவர் மற்றும் புரெவி புயல்களால் மக்களும், அரசின் நிதி நிலையும் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதால், விரைவில் மத்திய அரசு அவசர நிதியாக 1,200 கோடி ரூபாயை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை 99.60 ரூபாயிலிருந்து, 150 ரூபாயாக உயர்த்த வேண்டும், நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியிடம் கடிதம் வாயிலாக வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா நினைவிடம் 27ஆம் தேதி திறப்பு