சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து வாகனம் இல்லா போக்குவரத்தை மேம்படுத்த 'ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்' என்ற நிகழ்ச்சியை நடத்திவருகிறது. வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரை 'ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்' நிகழ்ச்சி நடைபெறும்.
அந்த வகையில் சென்னை அண்ணா நகரில் இன்று நடைபெற்ற 'ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்' நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். சுமார் 1.6 கி.மீ. தூரம் நடை பயிற்சி செய்தார். அதோடு சைக்கிள் ஓட்டினார். டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன், பாஸ்கெட் பால் விளையாட்டுகளை பொதுமக்களுடன் விளையாடினார்.
அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது. அனைவரும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி மிகவும் அவசியம். எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோது நான் 2, 3 நாட்களில் குணமடைந்துவிட்டேன். எனக்கு பெரிதாக ஒன்றும் பாதிப்பு ஏற்படவில்லை. அதற்கு உடற்பயிற்சியே காரணம்.
எனக்கு 69 வயதாகிவிட்டது. ஆனால், யாரும் நம்பமாட்டார்கள். நானும், எனது மகனும் வெளிநாடுகளுக்குச் சென்றால் அண்ணன், தம்பியா என்று கேட்பார்கள். பசிக்கும் போது சாப்பிட வேண்டும். வயிறு நிரம்ப சாப்பிடக்கூடாது. நேரம் கிடைக்கும் போது உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல்நலத்தை பேணிக் காத்தால் கவலைகள், மன சங்கடங்கள் நம்மைவிட்டு ஓடிப்போகும் எனத் தெரிவித்தாா்.
இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் வைக்கப்படும்… அமைச்சர் ரகுபதி