சென்னை: இன்று(ஜூன்.17) தலைமைச் செயலகத்திலிருந்து ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக மதுரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், மதுரை மாவட்டத்தில் உள்ள 85 நூலகங்களுக்கு போட்டித் தேர்வுக்கான ரூ.30 லட்சம் மதிப்பிலான 13 ஆயிரம் நூல்கள் மற்றும் நூலடுக்குகளை வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்.
மதுரை நூலகத்தைச் சேர்ந்த நூலகர்களுக்கு அந்நூல்களை வழங்கினார். போட்டித் தேர்வுகளுக்காக நகர்ப்புற பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்பு கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், கிராமப்புற மாணவர்களும் போட்டித் தேர்வுகளுக்கு படிப்பதற்கான வசதியினை ஏற்படுத்தி தரும் நோக்கத்துடன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பெறப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கான 164 நூல்கள் கொண்ட தொகுப்பினை, மதுரை மாவட்டத்தில் உள்ள மாவட்ட மைய நூலகம், முழு நேர நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் மற்றும் கிளை நூலகங்கள் ஆகிய 85 நூலகங்களுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
மேலும், அனைத்து நூலகங்களுக்கும் இரும்பு புத்தக அடுக்குகளையும் வழங்கினார். இப்புத்தக தொகுப்புகளில் மொத்தம் 13,000 புத்தகங்கள் அடங்கும்.இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நாட்டு மக்களின் விருப்பம் என்ன? என்பது பிரதமருக்கு புரியவில்லை - ராகுல்காந்தி!