தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப். 24) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத் துறையின்கீழ் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கப் பணியாளர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கருணை ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தினை தொடங்கிவைத்தார்.
திட்டத்தைத் தொடங்கிவைக்கும் பொருட்டு, ஓய்வுபெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கப் பணியாளர்கள் ஒன்பது பேருக்கு ஓய்வூதிய அட்டைகளை (PACCS EPS CARD) வழங்கினார்.
உழவர்களுக்குத் தேவையான குறுகிய காலப் பயிர்கடன், முதலீட்டுக் கடன், வேளாண் தொழிலுக்குத் தேவையான உரம், விதை போன்ற இடுபொருள்களை வழங்கிவருவதோடு, பொது விநியோகத் திட்டத்தின்கீழ் அத்தியாவசியப் பொருள்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து, உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வதிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் முக்கியப் பங்காற்றிவருகின்றன.
உழவர்களின் முதுகெலும்பாகச் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தை இந்தியாவிலேயே முதன் முதலாக ஆரம்பித்த பெருமை தமிழ்நாட்டையே சாரும். தற்போது 4,449 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டுவருகின்றன. இச்சங்கங்களில் மொத்தம் 25 ஆயிரத்து 546 பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் தற்போது பணியாற்றிவரும் பணியாளர்களில், பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் (Employees Pension Scheme) உறுப்பினரல்லாத 19 ஆயிரத்து 876 பணியாளர்களுக்குத் தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கியில் கருணை ஓய்வூதிய நிதியம் ( PACcs Employees Ex - Gratia Pension Corpus ) அமைக்கப்பட்டு அவர்கள் ஓய்வுபெற்ற பிறகு இந்த நிதியிலிருந்து மாதம் ஆயிரம் ரூபாய் கருணை ஓய்வூதியமாக வழங்கப்படவுள்ளது.
ஏற்கனவே ஓய்வுபெற்ற எட்டாயிரத்து 752 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கப் பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியமான ஆயிரம் ரூபாய் அந்தந்தச் சங்கங்களால் வழங்கப்படும். இத்திட்டத்தினால் ஆண்டொன்றுக்கு கூடுதலாக 34 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவினம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு, தலைமைச் செயலாளர் முனைவர் ராஜிவ் ரஞ்சன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க...பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்கும் வழக்கு - பதிவுத் துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்