தமிழ்நாட்டிற்கு அந்நியநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு பயணம் செய்வார் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்றுகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து காலை 9 மணியளவில் லண்டன் செல்லும் முதலமைச்சர், அங்கு சர்வதேச மனித வள மேம்பாட்டு நிறுவனத்தினரைச் சந்தித்து பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.
பின்னர் லண்டனிலுள்ள பல்வேறு முதலீட்டாளர்களைச் சந்திக்கும் முதலமைச்சர், செப்டம்பர் 1ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குச் செல்கிறார். அங்கு அமெரிக்க வாழ் தமிழர்களையும் தொழில் முனைவோர்களையும் சந்தித்து தழ்நாட்டில் முதலீடு செய்ய வலியுறுத்துவார். தொடர்ந்து, செப்டம்பர் 7ஆம் தேதி அங்கிருந்து துபாய் செல்கிறார். துபாயில் இரு நாட்கள் தங்கியிருந்து தொழில்முனைவோர்களைச் சந்திக்கும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, செப்டம்பர் 10ஆம் தேதி தமிழ்நாட்டுக்குத் திரும்புகிறார்.