நிவர் புயல் தாக்கத்தால் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி முழுக் கொள்ளளவை எட்டி வருவதால், பாதுகாப்பு கருதி இன்று பகல் 12 மணியளவில் ஏரி திறக்கப்பட்டது. முதலில் 1,000 கன அடி திறக்கப்பட்ட நிலையில் தற்போது 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், ” 60 ஆயிரம் கன அடி நீர் வரை அடையாறு ஆற்றில் செல்லும் வகையில் வழி செய்யப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஏரிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தேவைக்கு ஏற்ப படிப்படியாக நீர் திறப்பு அதிகரிக்கப்படும்.
சென்னை மாநகரில் 30 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு, 30 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீர் ராட்சத இயந்திரங்கள் கொண்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. தீவிர மழையையடுத்து ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை கண்காணிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது “ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு - அச்சத்தில் அடையாறு கரையோர மக்கள்!