விஜய் நடித்த சச்சின் உட்பட பல்வேறு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவரும், கடவுச்சீட்டு என்ற படத்தின் இயக்குநருமான ராகவா ராஜா வளசரவாக்கம் பகுதியில் வசித்துவருகிறார். இவர், வளசரவாக்கத்தில் உள்ள காமகோடி நகர் குகன் தெரு வழியாக நேற்றிரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு சிறுவர்கள் இயக்குனர் ராகவா ராஜாவின் பின்புறமாக இருந்து முதுகை தட்டி உள்ளனர். அப்போது அவர் திரும்பி பார்த்த போது சிறுவர்கள் அவர் கையில் வைத்திருந்த செல்ஃபோனை பறித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து வளசரவாக்கம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந் நிலையில் அந்த சிறுவர்கள் மீண்டும் அதிகாலையில் அந்தப் பகுதிகளில் செல்ஃபோன் பறிப்பில் ஈடுபட முயற்சி செய்தபோது, தனிப்படை காவல் துறையினர் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.
கைது செய்யபட்ட இரண்டு சிறுவர்களும் வடபழனி, விருகம்பாக்கம் பகுதிகளில் ஏற்கனவே செல்ஃபோன் பறிப்பில் ஈடுபட்டதும், அவர்கள் மீதான வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதனிடையே இரு சிறுவர்களையும் வடபழனி காவல் நிலையத்தில் தனிப்படை காவல் துறையினர் ஒப்படைத்தனர். வடபழனி காவல் துறையினர் இருவரையும் கெல்லிஸ் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.