செங்கல்பட்டு: சர்வதேச அளவிலான 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம்-பூஞ்சேரி அருகே நடக்க உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செஸ் போட்டியாளர்களும் பார்வையாளர்களும் வருகை தர உள்ளனர்.
வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடக்க உள்ள போட்டியால், மாமல்லபுரம் புதுப்பொலிவு பெற்று வருகிறது. ஏற்கெனவே, தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கிவரும் மாமல்லபுரம், தற்போது நடைபெற உள்ள சர்வதேச செஸ் போட்டிகளால் உலகின் பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ்நாடு அரசு, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக மாமல்லபுரம் வருகை தரும் போட்டியாளர்கள் மற்றும் வெளிநாட்டைச்சேர்ந்த பார்வையாளர்கள் உள்ளிட்டவர்கள் தங்குவதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள அரங்கத்தை வடிவமைக்கும் பணியும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. அத்துடன் வாகனங்களை நிறுத்துவதற்காக, 8 ஏக்கர் பரப்பளவில் சிசிடிவி கேமராக்களுடன் வாகனங்கள் நிறுத்துமிடம் தயாராகி வருகிறது.
இதற்கிடையே சாலையோரங்களை சுத்தப்படுத்துதல், அழகு படுத்துதல் போன்ற பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன. பேருந்து நிறுத்தங்களில் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடைகள், இருக்கைகள் போன்றவைகளும் புதுப்பொலிவு பெற்று வருகின்றன.
வரும் 20ஆம் தேதிக்குள் இந்தப் பணிகள் முடிவடைய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், உள்ளூர் நிர்வாகம், தமிழ்நாடு அரசு என போட்டி போட்டுக்கொண்டு அதற்கானப் பணிகளை கவனித்து வருகின்றனர்.
சர்வதேச செஸ் போட்டிகளுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மாமல்லபுரத்தில் இன்று (ஜூலை3) பார்வையிட்டனர்.
இதையும் படிங்க: 'செஸ் ஒலிம்பியாட்' போட்டியின் தொடக்க விழாவை இயக்கும் விக்னேஷ் சிவன்!