தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, கரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா, சென்னை, கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் புத்தகங்கள் வழங்கி வரவேற்றார்.
வரவேற்புரை
அதனைத் தொடர்ந்து வரவேற்புரை ஆற்றிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், "மருத்துவர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் துறைச் செயலாளர்கள், அமைச்சர்கள் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு முதலமைச்சர், தானே 'மருத்துவர் தினத்தில் கலந்துகொண்டு சான்றிதழ் வழங்குவேன்' என கூறி வருகை புரிந்தார்.
கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்டார். கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவர்கள் 34 பேருக்கு தொகை வழங்குவதற்கான கோப்புகள் இறுதி நிலையில் உள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது " என வரவேற்புரை ஆற்றினார்.
விருதுகள்
தொடர்ந்து, கரோனாவால் இறந்த மருத்துவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவர்களை பாராட்டும் வகையில் பாராட்டு சான்றிதழ்களை மருத்துவக் கல்லூரி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரத் நலத்துறை குருநாதன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், இந்திய மருத்துவம் ஹோமியோபதி மருத்துவத்துறை ஆணையர் கணேஷ், இந்திய மருத்துவர் சங்கத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்களுக்கு முதலமைச்சர் விருதுகளை வழங்கினார்.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 28 ஆயிரத்து 31 தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போட்டதற்காக மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்.
தொடர்ந்து ஐம்பதாயிரம் பல்ஸ் ஆக்சி மீட்டரை பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் பெற்றுக்கொண்டார். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஊழியர்களின் ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் துணைவேந்தர் சுதா சேஷையன் வழங்கினார்.
மருத்துவர் நலன் காக்கும் அரசு
அப்போது, முதலமைச்சர் பேசியதாவது, "மக்கள் நலன் காக்கும் அரசு மட்டுமல்ல, மருத்துவர் நலன் காக்கும் அரசாகவும் என்றும் மருத்துவர்களோடு தமிழ்நாடு அரசு துணை நிற்கும்; மருத்துவர்களின் தியாகத்திற்கும் சேவைகளுக்கும் அன்பார்ந்த பாராட்டுக்கள்" என தெரிவித்தார்.