தலைமைச் செயலகத்தில் நாளை, கரோனா தளர்வுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். அதனைத்தொடர்ந்து, மருத்துவ நிபுணர் குழுவுடனும் அவர் ஆலோசிக்கவுள்ளார். அப்போது பள்ளிகள், கல்லூரிகளை முழுமையாக திறப்பது குறித்தும், திரையரங்குகளுக்கு 100% இருக்கை அனுமதி அளிப்பது குறித்தும் பேசப்படும் எனத் தெரிகிறது.
மேலும், ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், பொதுத்தேர்வு எழுதும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த ஆலோசனைக்கு பின்னர் முழுமையாக பள்ளிகளை திறப்பது குறித்தும், 100% திரையரங்கில் பார்வையாளர்கள் அனுமதி குறித்தும் மற்றும் நீச்சல் குளங்களை திறப்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், கடந்த மாதம் நடந்த ஆலோசனைக்கு பிறகுதான், திரையரங்கில் 50% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் பொங்கல் விழாவின்போது 100% க்கு அனுமதி வழங்கப்பட்டு, பலத்த எதிர்ப்பு எழுந்ததும் அவ்வுத்தரவு திரும்பப் பெறப்பட்டு 50% என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ்?