தமிழ்நாட்டில் ஊரடங்கு காரணமாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சென்னையில் மூன்று இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அத்தொழிலாளர்களை ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து, அவர்களுக்கு தரப்படும் உணவு, அத்தியாவசியப் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று காணொலிக் காட்சி மூலமாக ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் மற்றும் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் உருக்குத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரிடம் முதலமைச்சர் பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது, ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாத ஒடிசா மாநிலத் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் அரசால் செய்து கொடுக்கப்பட்டுள்ள உணவு, மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் குறித்து பேசப்பட்டன.
இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சண்முகம், காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பாரம்பரிய மருத்துவர்களை கலந்தாலோசிக்க வேண்டும் - தேமுதிக தலைவர் விஜயகாந்த்