நாளை நள்ளிரவுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மருத்துவ நிபுணர் குழுவுடனான ஆலோசனைக் கூட்டம் பிற்பகலில் நடைபெற்றது. கடந்த ஆறு மாதங்களில் ஊரடங்கின் இடையிடையே பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் மட்டும் இயங்காமல் உள்ளன.
எனவே பள்ளி, கல்லூரிகள் திறப்பு, மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து, ரயில் போக்குவரத்து உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தன் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு செல்லலாம் என்ற அறிவிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகவே கரோனா தொற்று குறையாத காரணத்தால், அங்கு அதிகளவிலான காய்ச்சல் முகாம்கள் அமைக்க வேண்டும் என்றும், மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும், மாநிலத்தில் கரோனா தொற்று குறையாத மாவட்டங்களில் அதிகப்படியான காய்ச்சல் முகாம்கள் அமைக்கவும் நிபுணர்கள் குழு ஆலோசனை வழங்கியுள்ளது. இறுதிச்சடங்கு, சுபநிகழ்ச்சிகளில் முகக்கவசம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட நெறிமுறைகள் பின்பற்றப்படாதது வருத்தம் அளிப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் குழு கவலை தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று காலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டார். இக்கூட்டங்களில் ஆலோசிக்கப்பட்டதன் அடிப்படையில் தமிழ்நாட்டில், மேலும் சில தளர்வுகளை அறிவிப்பதா அல்லது மீண்டும் கட்டுப்பாடுகளை விதிப்பதா என்றும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்தும் முதலமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அக்டோபர் 1 முதல் பள்ளிக்குச் செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைப்பு!