முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சென்னை மாநகரில் கடந்த 2015ஆம் ஆண்டு கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10.15 கிலோ மீட்டர் உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் சேவை துவக்கப்பட்டது. அதேபோல், 2016ஆம் ஆண்டு சென்னை விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான 8.6 கிலோ மீட்டர் நீளத்திலான வழித்தட பகுதி மற்றும் ஆலந்தூர் முதல் பரங்கிமலை வரையில் 1.2 கிலோ மீட்டர் நீளத்திலான வழித்தடத்தில் பயணிகள் சேவை துவக்கப்பட்டன.
2017ஆம் ஆண்டு கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரையும், 2018ஆம் ஆண்டு நேரு பூங்கா முதல் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வரை சுரங்க வழித்தடத்திலும், சின்னமலை முதல் ஏ.ஜி.-டி.எம்.எஸ் வரையிலான 4.35 கிலோ மீட்டர் நீள சுரங்க வழித்தடத்திலும் பயணிகள் சேவை துவக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 2019இல் டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான 10.9 கிலோ மீட்டர் நீளத்திலான சுரங்க வழித்தடத்தில் பயணிகள் சேவை துவக்கப்பட்டது.
இதுமட்டுமல்லாமல், மாதவரம் முதல் சிப்காட் வரை, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை, மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை என மொத்தம் 118.9 கி.மீ நீளத்திலான மூன்று வழித்தடங்கள் 61,843 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு அரசு ஆணை வழங்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதி பங்களிப்பு கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையின் மிக முக்கியத்துவம் வாய்ந்த மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களை சூட்ட அரசு முடிவு செய்திருக்கிறது. அதனடிப்படையில், ஆலந்தூர் மெட்ரோ என்பது இனி ’அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ’ ரயில் நிலையம் என்றும், சென்ட்ரல் மெட்ரோ என்பது ’ புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ’ ரயில் நிலையம் என்றும், புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ என்பது ’புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ ‘ என்றும் பெயர் மாற்றங்கள் செய்து ஆணையிடப்பட்டுள்ளது“ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை பல்கலைக்கழகம்: செப் 10க்குள் இளநிலை சேர்க்கையை முடிக்க உத்தரவு!