இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை மாநகராட்சி சார்பில், செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட தொடக்க விழா, தீவுத்திடலில் இன்று நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு திட்டத்தினை தொடக்கிவைத்தார். இத்திட்டம் மூலம் வீடுகள் தோறும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பெறப்பட்டு, அனைத்து திடக்கழிவுகளையும் குப்பை கொட்டும் வளாகத்திற்கு கொண்டு செல்வதை தவிர்த்து, நவீன தொழில்நுட்ப முறையில் மறுசுழற்சி செய்து நீர், நிலம் மாசுபடுவதை தவிர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை மாநகராட்சியின் அடையாறு, ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், வளசரவாக்கம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய 7 மண்டலங்களில் உள்ள 92 வார்டுகள், 16,621 தெருக்களில், செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 11,000 ஆயிரம் பேர் புதிதாக வேலைவாய்ப்பு பெறுவர். இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 447 கோடி ரூபாய் செலவிடப்படுவதாகவும், திட்டத்தின் கால அளவு 8 ஆண்டுகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “திட்டம் தொடங்கப்பட்டுள்ள 7 மண்டலங்களிலும், வீட்டுக்கு வீடு சென்று கழிவுகளை சேகரிப்பதற்காக இ-ரிக்ஷாக்கள், 300 கனரக மற்றும் 3,000 இலகு ரக பேட்டரி வாகனங்கள் பயன்படுத்தப்படும். உலர் கழிவுகள், ஈரக்கழிவுகள், மருந்துகள் உள்ளிட்ட கழிவுகள் என 3 விதமாக பிரிக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கப்படும்.
இறந்த விலங்குகளின் உடல்கள், பழத்தோட்ட கழிவுகள் உள்ளிட்டவற்றிற்காக தனி வாகனம் பயன்படுத்தப்படும். விழாக்காலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் 24/7 சேவை தொடங்கப்படவுள்ளது“ என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடு இடங்கள் - நாளை குலுக்கல்