சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய குழந்தையையும் தாயையும் இளைஞர்கள் பத்திரமாக மீட்டனர்.
இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அந்த இளைஞர்களுக்கு தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில், “தாயையும் சேயையும் காப்பாற்றியவர்களின் தீரமிக்க செயல் பாராட்டுக்குரியது. அரசால் சிறப்பிக்கப்படுவார்கள்.
தன்னுயிர் பாராது பிறரது உயிர் காக்க துணிந்த அவர்களது தீரத்தில் மனிதநேயமே ஒளிர்கிறது. பேரிடர்களின்போது பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்று (அக்.25) சுற்றுலாப் பயணிகள் ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் குளித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக திடீரென அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், ஒரு பெண் தனது குழந்தையுடன் சிக்கிக் கொண்டார்.
இதனைக் கண்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து குழந்தையையும் தாயையும் பத்திரமாக மீட்டனர். ஆனால், இளைஞர்களின் இருவர் தவறி வெள்ளத்தில் விழுந்த நிலையில் இருவரும் நீந்தி கரை சேர்ந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அரசு பேருந்தில் படிக்கட்டில் பயணம் - தட்டி கேட்ட ஓட்டுநரிடம் மாணவர்கள் ரகளை!