சென்னை திருமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக திருமங்கலம் காவல் நிலையத்திற்கு புகார்கள் குவிந்தன. இதனால் ஆய்வாளர் ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறையினர் குற்றவாளியை கண்டுபிடிக்க மாறுவேடத்தில் விசாரணை செய்து வந்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதியன்று, பாடி குப்பத்தில் இளைஞர் ஒருவர் கஞ்சா வாங்குவதாக ரகசிய தகவல் வந்ததின் பேரில், உடனே சம்பவ இடத்துக்கு சென்ற காவலர்கள் அந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவருடைய பேண்ட் பாக்கெட்டில் கஞ்சா பொட்டலம் இருந்தை கண்டுபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து யார் விற்பனை செய்கிறார்கள்? என்று அவர்கள் வினவியுள்ளனர், அதற்கு அந்த இளைஞர், "போன் செய்தால் இரு சக்கர வாகனத்தில் ஒருவர் வந்து கஞ்சா பொட்டலத்தை கொடுத்துவிட்டு செல்வார்" என்று தெரிவித்தார். அவரை போனில் தொடர்பு கொள்ளுமாறு காவலர்கள் அறிவுறித்தினர், அந்த நபரும் பத்து கஞ்சா பொட்டலம் வேண்டும், அதை நெற்குன்றத்திற்கு கொண்டு வருமாறு கூறினார்.
அவ்விடத்தில் சிறுது நேரம் கழித்து இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை, மறைந்திருந்த, உதவி ஆய்வாளர் யுவராஜ் அவரை சுற்றி வளைத்து பிடித்து, கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றார். அதைத் தொடர்ந்து அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா விற்றுவந்தது பூவிருந்தவல்லி காட்டுப்பாக்கம் ராமதாஸ் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தமூர்த்தி (38) என தெரியவந்தது.
மேலும் ஆனந்தமூர்த்தி ஆந்திராவில் இருந்து நூறு ரூபாய்க்கு கஞ்சா வாங்கி அதை இருநூறு ரூபாய்க்கு சென்னையில் விற்றுவந்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் இருந்த 60 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ஆனந்தமூர்த்தி மீது அடிதடி, கஞ்சா வழக்கு கோயம்பேடு, மதுரவாயல், பூந்தமல்லி ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம்: தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்