சென்னை: வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் உழவர் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் உழவர் பேரணி சென்றபோது, ஒன்றிய இணை அமைச்சரின் மகன் கார் மோதி உழவர் உயிரிழந்தனர் என்ற குற்றச்சாட்டு வலுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் உழவர், செய்தியாளர் உள்பட எட்டு பேர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து உயிரிழந்த உழவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது இல்லத்திலிருந்து செல்ல முயன்றபோது பன்வீர்பூர் என்ற பகுதியில் வைத்துக் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். இச்சூழலில், பிரியங்கா காந்தி கைதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்த வகையில், உழவருக்கு நியாயம் வேண்டி மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாகச் சென்னை வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில், மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்திப் போராட்டம் நடத்தினர்.
முன்னதாக வில்லிவாக்கம் பேருந்து நிலைய சாலையிலிருந்து அம்பேத்கர் சிலை வரை தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம் வந்தனர். அதேசமயம் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் உத்தரப் பிரதேச யோகி அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரஞ்சன் குமார், "உழவருக்கு ஆறுதல் கூறச் சென்ற அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை 48 மணி நேரத்திற்கு மேலாக தடுப்புக் காவலில் கைதுசெய்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்யாமல் 50 மணி நேரத்திற்குப் பிறகு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது பாபாசாகேப் அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயலாகும். எனவே அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை புறந்தள்ளிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: லக்கிம்பூர் வன்முறை - உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு