பேருந்துகளில் பயணிகள் தாங்கள் இறங்கும் இடங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள ஏதுவாக, ஒலிப்பெருக்கி மூலம் நிறுத்தங்களைத் தெரிவிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும் எனச் சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில், மதுரை மாநகரப் பேருந்துகளில் சோதனை அடிப்படையில் ஜிபிஎஸ் கருவி மூலம் அடுத்தடுத்த நிறுத்தங்களை முன்கூட்டியே பயணிகளுக்கு அறிவிக்கும் கருவி பொருத்தப்பட்டது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, நெரிசல்மிக்க நேரங்களில் இவ்வசதி பெரிதும் பயனுள்ளதாக இருப்பதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது, இவ்வசதி சென்னை மாநகரப் பேருந்துகளிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன்படி வழித்தடங்கள் 25 ஜி, 101, 570 ஆகிய 'சிவப்பு நிறப் பேருந்துகள்' இயங்கும் வழித்தடத்தில் முதற்கட்டமாக, 75 பேருந்துகளில் இந்த வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.
இந்தக் கருவியானது நிறுத்தம் வருவதற்கு 100 மீட்டருக்கு முன்னதாகவே தமிழில் அறிவிப்பினை ஒலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் வர்த்தக விளம்பரங்களையும் பேருந்து நிறுத்த அறிவிப்புகளோடு சேர்த்து அறிவிப்பதன் மூலம், மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு மாதக் கட்டணமாகப் பேருந்து ஒன்றுக்கு 1,200 ரூபாய் வருவாய் கிடைக்குமென்றும் கூறப்பட்டுள்ளது. வரவேற்பினை பொறுத்து படிப்படியாக சென்னையின் அனைத்துப் பேருந்துகளிலும் இவ்வசதி விரிவுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'பட்டனை அழுத்தினால் காப்பாற்ற போலீஸ் வரும்'