சென்னை: சாலை விபத்துகளை தடுப்பதற்காக சென்னை போக்குவரத்து காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கெனவே தவறான நம்பர் பிளேட்டுகள், அதிக சப்தம் எழுப்பும் ஹாரன், அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர் பொருத்திய கார் தொர்டபான குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் (மே 04) போக்குவரத்து காவலர்கள் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் பக்க கண்ணாடி இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக வடக்கு போக்குவரத்து காவல் மாவட்டத்தில் 270 வழக்கு, போக்குவரத்து தெற்கு மாவட்டத்தில் 200 வழக்கு போக்குவரத்து கிழக்கு மாவட்டத்தில் 209 வழக்கு என மொத்தம் 679 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கார்களில் கறுப்பு ஸ்டிக்கர் : அதேபோல சன் கன்ட்ரோல் ஃபிலிம் எனப்படும் கார் கண்ணாடிகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டிச் செல்லும் வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கார் கண்ணாடிகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டி மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக கார்களை இயக்கியதால், போக்குவரத்து வடக்கு மாவட்டத்தில் 94 வழக்குகளும், போக்குவரத்து தெற்கு மாவட்டத்தில் 100 வழக்குகளும் , போக்குவரத்து கிழக்கு மாவட்டத்தில் 98 வழக்குகள் என மொத்தம் 292 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த மே 1ஆம் தேதி போக்குவரத்து காவல் துறையினர் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டு, ஸலைடிங் நம்பர் பிளேட் எனப்படும் தவறான நம்பர் பிளேட் பொருத்தி வாகனம் ஓட்டியதற்காக மே 1ஆம் தேதி நடத்தப்பட்ட சிறப்பு வாகன தணிக்கையில் 1036 வழக்குகள் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல அதிக சப்தம் எழுப்பும் ஹாரன், மியூசிக்கல் ஹாரன், அதிக ஒலியெழுப்பும் சைலென்சர், மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் மீறி வாகன பதிவெண் தகடு பொறுத்தி வாகனம் இயக்கிய 607 பேர் மீது போக்குவரத்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'போதை பொருள் தடுப்பு மையங்கள் அங்கீகாரம் பெற்றவையா எனப் பார்க்கவேண்டும் - ராதாகிருஷ்ணன்'