சென்னை: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம், சென்னை மாநகர காவல் துறை மற்றும் சர்வதேச நீதி இயக்கம் சார்பில், குழந்தைகள் உரிமை ஊக்குவிப்பு மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு குறித்த கருத்தரங்கம், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கு நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், காவல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப்பில் உள்ள குழந்தைகளின் திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
18 வயதுக்கு குறைவான சிறார் குற்றச் சம்பவங்களில் சிக்குவது அதிகரித்து வருவதாகவும், அதைத் தடுக்கும் நடவடிக்கையாக புதிதாக 51 கிளப்கள் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
பின்னர் விழா உரை நிகழ்த்திய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி பாஸ்கரன், கல்வி பெறுவது குழந்தைகளின் மனித உரிமை என்றும், அதைத் தடுக்கக் கூடாது எனவும், தடுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை பெற குழந்தைகளுக்கு உரிமை உள்ளதாகவும், அதை பெற்றோர் வழங்காவிட்டாலும், அரசுக்கு அந்த பொறுப்பு உள்ளதாகவும், அதையே அரசியல் சாசனமும் வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: கரந்தைத் தமிழ்ச் செம்மல் ச.இராமநாதன் மறைவு - முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்