சென்னை: திருவல்லிக்கேணி கற்பக கன்னியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜா(49)-வை கஞ்சா விற்பனையில் ஏற்பட்டத்தகராறில் நேற்று (ஆக.16) விக்டோரியா மருத்துவமனை அருகே ஓட ஓட 6 பேர் கொண்ட ரவுடி கும்பல் வெட்டிப்படுகொலை செய்த சம்பவம் குறித்து ஜாம்பஜார் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஜாம்பஜார் போலீசார் நடத்திய விசாரனையில், முன்னதாக அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வினோத், பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள நிலையில் தற்போது, தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனையில் சிட்டிசேகரின் மகன்களான சூர்யா, தேவா ஆகியோர் அக்குற்றச்செயலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இக்குற்றச்செயலுக்கு போட்டியாக ஆட்டோ ஓட்டுநர் ராஜா இருந்தநிலையில் இவர்கள் இரண்டு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, சூர்யாவும் தேவாவும் தங்களது கூட்டாளிகளுடன் இணைந்து ஆட்டோ ஓட்டுநர் ராஜாவை கொலைசெய்த சம்பவத்தில் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
முன்னதாக இக்கும்பல், அரும்பாக்கம் ஐஸ் ஹவுஸ் பகுதியைச்சேர்ந்த அஜித்குமார்(25), ஸ்ரீரஞ்சன்(19) ஆகியோர் கஞ்சா வாங்க வந்தபோது ஏற்பட்டத்தகராறில் அவர்களை வெட்டிவிட்டு, பின்னர் ஆட்டோ ஓட்டுநர் ராஜாவைக்கொலை செய்து விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் இருவரும் சூர்யாவின் கூட்டாளிகளான ஜாம்பஜாரைச் சேர்ந்த அமர், தனுஷ் ஆகியோரிடம் கஞ்சா கேட்டபோது, அவர்கள் கஞ்சா கொடுக்க முடியாது எனத் தகாத வார்த்தையால் பேசிதாகவும், வாட்ஸ் அப்பில் 5 கத்தி புகைப்படங்களை அனுப்பி, 'எந்த கத்தியில் சாக விரும்புகிறாய் எனத்தேர்வு செய்?' எனவும் குறுஞ்செய்தி வழியாக அனுப்பவே ஆத்திரமடைந்த அஜித், பதிலுக்கு தகாத வார்த்தையால் பேசி நேரில் வரும்படி அழைத்ததாகத் தெரிகிறது.
இதனையடுத்து அஜித் தனது நண்பர்களான ஸ்ரீரஞ்சன், ஸ்ரீவாசன், லோகேஸ்வரன் ஆகியோருடன் அரும்பாக்கம் திருவிக நகருக்கு சென்றதும் அங்கு கத்தியுடன் தயார்நிலையில் இருந்த சூர்யா, தேவா, தனுஷ் உட்பட அவரது கூட்டாளிகள் அஜித்திடம் பணம், செல்போனை பறித்துவிட்டு ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளனர். இதில் காயமடைந்த அஜித், ஸ்ரீரஞ்சன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்தச்சம்பவம் தொடர்பாக அமைந்தகரை போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக உள்ள சூர்யா, தேவா, தனுஷ், அமர் உள்ளிட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிலை வாங்குவது போல் நடித்து சிலை திருடர்களை பிடித்த காவல்துறையினர்