சென்னை: சமீப காலமாக சைபர் கிரைம் குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றிப்பணம் பறிக்கும் நோக்கத்தில் புது யுக்தியைக் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பொதுமக்களின் செல்போன் எண்ணுக்குத் தங்கள் வீட்டின் மின் இணைப்பு (Electricity) இன்று இரவோடு இரவாக துண்டிக்கப்படும் என்றும்;
மேலும், சென்ற மாத பில் கட்டணம் அப்டேட் செய்யப்படவில்லை எனவும்; உடனே மின்வாரிய அலுவலரைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு மொபைல் எண்ணையும் சேர்த்து குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.
இதனை நம்பி தொடர்பு கொள்ளும் பொதுமக்களிடம், வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று, அவர்களது அக்கவுன்ட்டில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் மின் இணைப்புத் துண்டிக்கப்படும் என்று வரும் போலியான அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் நம்பி ஏமாற வேண்டாம் எனவும், அந்த செல்போன் எண்களைத் தொடர்புகொள்ள வேண்டாம் எனவும் சென்னை காவல் துறை எச்சரித்துள்ளது.
சங்கர் ஜிவால் விடுத்த எச்சரிக்கை: மேலும், மின்வாரியத்தில் இருந்து இது போன்ற குறுஞ்செய்திகளோ, செல்போன் அழைப்புகளோ வராது என்பதால் அனைவரும் கவனமுடன் இருக்குமாறும் பொதுமக்களைச் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இதேபோல, அரசு அலுவலர்களின் புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் டி.பி-யாக வைத்து தெரியாத எண்களில் இருந்து வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசு உயர் அலுவலர்கள் மற்றும் உயர் பொறுப்பிலுள்ள நபர்களின் புகைப்படங்களை வாட்ஸ்-அப்பில் Display Pictureஆக பயன்படுத்தி சக அலுவலர்கள் மற்றும் பணிபுரியும் அலுவலர்களைத்தொடர்பு கொண்டு அமேசான் கிஃப்ட் கார்டுகளை வாங்கி அனுப்புமாறு கூறுதல் மற்றும் பணம் அனுப்பக் கூறுதல் போன்ற குற்றங்கள் தற்போது நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் பொதுமக்கள் யாரும் தங்களுக்குத் தெரிந்த நபர்கள் அல்லது அலுவலர்களின் புகைப்படத்துடன் தெரியாத செல்போன் எண்ணிலிருந்து வரும் வாட்ஸ்-அப் குறுஞ்செய்திகளை, மின்னஞ்சலையோ, அல்லது முகநூலில் வரும் மெசஞ்சர் குறுஞ்செய்திகளையோ நம்பி பணமோ அல்லது கிஃப்ட் கார்டுகளோ அனுப்ப வேண்டாம் எனவும், அந்த குறுஞ் செய்திகளைப் புறக்கணிக்குமாறும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: விதவிதமான முறையில் மோசடி: சைபர் கிரைம் காவல் துறையினர் விழிப்புணர்வு வீடியோ வெளியீடு