சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, பேருந்து பணிமனை அருகே தனியார் கம்பெனி ஊழியர்களான விஜயகுமார், சாமிக்கண்ணு ஆகியோர் பணிக்கு செல்ல பேருந்தில் ஏற முயன்றனர். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர், இரண்டு பேரிடமும் செல்போனைப் பறித்துவிட்டு தப்ப முயன்றார்.
இதையடுத்து அந்த நபரை பிடிக்க இந்த இளைஞர்கள் உட்பட பொதுமக்களில் சிலர் விரட்டி சென்றனர். அவர்களை கண்டு அஞ்சிய அந்த நபர் இருசக்கர வாகனத்தை ஒரு ஓரத்தில் போட்டுவிட்டு அருகில் இருந்த முட்புதருக்குள் மறைந்துகொண்டார். இதையடுத்து அவரைப் பிடித்த பொதுமக்கள் அந்த நபரை சரமாரியாக தாக்கினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பூவிருந்தவல்லி காவல் துறையினர் அந்த நபரை அடித்து காவல் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில் அவர் கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த அர்ஜூன் (20) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்த காவல் துறையினர் அந்த நபரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட இரண்டு செல்போன்களையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் படிக்க : செல்ஃபோன் கடைகளில் நூதன முறையில் திருடும் இரண்டு இளைஞர்கள் !