சென்னை: இறக்கும் தருவாயில் தனக்குத் தானே இறுதி அஞ்சலி எழுதிய நபரின் செயல் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த முன்னாள் கார்பந்தய வீரர் எஜ்ஜி.கே. உமா மகேஷ். இவர் பார்முலா 1 கார் மேலாளராக பணியாற்றியுள்ளார். உலகெங்கும் பல்வேறு நிலப்பரப்புகளில் நடந்த கார் பந்தயங்களில் பங்கேற்றுள்ளார். இருதய அறுவை சிகிச்சை ஒன்றில் செப்டம்பர் 16ஆம் தேதி உமா மகேஷ் உயிரிழந்தார்.
இறப்பதற்கு முன்பாக தன்னைக் குறித்து சுவாரஸ்யமாக இவர் எழுதிய இறுதியஞ்சலி மடல் தற்பொழுது அனைவரது நெஞ்சத்தையும் உருக்கி வருகிறது. ஆபத்தான இருதய அறுவை சிகிச்சைக்கு முன்பாக தான் இறப்பதற்கு வாய்ப்புள்ளது என்பதை அறிந்து, தனக்குத் தானே இறுதி அஞ்சலி எழுதி, அதனை ஃபேஸ்புக் பதிவாகவும் முன்கூட்டியே எழுதிவைத்துள்ளார்.
அதில், தான் உலக குடிமகன் என்றும் பூமி எனும் கிராமத்தில் வாழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ''இல்லத்தரசன், இன்டர்நேஷனல் கார் பந்தய ஓட்டுநர், நடிகர், பகுத்தறிவுவாதி, சுயமாக சிந்திப்பவர், கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவர்" என தன்னை வர்ணித்துள்ளார்.
"நண்பர்களே, எதிரிகளே இரண்டுக்கும் இடைப்பட்டவர்களே, எனது நேரம் முடிந்து விட்டது. நன்றாக வாழுங்கள். வாழ்க்கையை ரசியுங்கள். கொண்டாட்டத்துடன் வாழுங்கள். ஜான் லெனொன் கூறியதைப் போல, ‘நாம் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் போது, நமக்கு நடக்கும் சம்பவமே வாழ்க்கை’ உங்கள் எல்லாருக்கும் எனது இறுதி வணக்கம்" எனக் கூறியுள்ளார்.
அவர் இறந்தபின், அவரால் எழுதப்பட்ட அஞ்சலி மடலை செய்தித்தாள்களில் குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். அதேபோல் ஃபேஸ்புக்கிலும் தன்னை பழங்கால காருடன் ஒப்பிட்டு இறுதி அஞ்சலி ஒன்றை எழுதியுள்ளார். இவர் எழுதிய இறுதி அஞ்சலி தற்போது இணையதளத்தைத் தொற்றிக்கொண்டுள்ளது. இறப்பதற்கு முன்பாக தனது உடல் உறுப்புகளையும் எஜ்ஜி.கே.உமா மகேஷ் தானம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.