சென்னை கொரட்டூரில் ரவுடி மணிகண்டன், அவரது கூட்டாளிகளை விழுப்புரம் காவல் துறையினர் பிடிக்க முயன்றபோது, ரவுகளுக்கும் காவலர்களுக்கும் இடையே நடந்த மோதலில் மணிகண்டன் துப்பாக்கியால் சுடப்பட்டார். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவருடன் இருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்தத் தாக்குதலில் உதவி ஆய்வாளர் பிரபு என்பவர் படுகாயம் அடைந்தார்.
அதைத் தொடர்ந்து உயிரிழந்த அவரின் உடல் உடற்கூறாய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் காயமடைந்த உதவி ஆய்வாளர் பிரபுவும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சென்னையில் சமீபகாலமாக ரவுடிகளை கட்டுப்படுத்தும் வகையில் காவல் துறையினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். அந்தவகையில், ஐஸ் அவுஸ் ஆனந்தன் என்கிற ரவுடியை அடையாறு மத்திய கைலாஷ் அருகே காவல் உதவி ஆணையர் சுதர்சன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு காவலர்கள் அவரை என்கவுன்ட்டர் செய்தனர்.
வியாசர்பாடி ரவுடி வல்லரசு காவலர்களை வெட்டிவிட்டு கொடுங்கையூர் பகுதியில் பதுங்கியிருந்தபோது, ஆய்வாளர்கள் ஜார்ஜ் மில்லர், ரவி தலைமையிலான காவலர்கள், அவரை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து மூன்றாவதாக தற்போது கொரட்டூரில் ரவுடி மணிகண்டன் மீது நடந்த இந்த என்கவுன்ட்டர் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பேராசிரியையிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர் கைது