இந்தியாவில் உள்ள எண்ணெய் கிணறுகளில் இருந்து புதிய முறையில் அதிகளவிலான எண்ணெய் உற்பத்தி செய்ய சென்னை ஐஐடியின் ஆராய்ச்சியாளார்கள் புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள ஆராய்ச்சி ஆய்வகங்களுடன் இணைந்து செயல்படும் இவர்கள், ‘குறைந்த உப்புத்தன்மை மேம்படுத்தப்பட்ட எண்ணெய் மீட்பு’ என்றழைக்கப்படும் வளர்ந்துவரும் மேம்பட்ட எண்ணெய் மீட்பு முறையில் ஆராய்ச்சி செய்து இதனை கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய சென்னை ஐஐடி பெட்ரோலியத் துறையின் பேராசிரியர் சித்தேந்தர் சிங் கூறும்போது, “இந்தியாவில் இயற்கை எரிவாயுவின் தேவை அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு மத்திய அரசின் நிதியுதவியுடன் புதிய முறையில் எண்ணெய், எரிவாயு கண்டுபிடிப்பினை தொடங்கினோம். அதன் மூலம் புதிய திட்டத்தின்படி 120 மில்லியன் டன் கூடுதலாக உற்பத்தி செய்ய முடியும். தற்பொழுது எண்ணெய், இயற்கை எரிவாயு நிறுவனம் (ONGC) எண்ணெய், எரிவாயு எடுக்கும் பணியை மேற்கொண்டுவருகிறது.
புவியியல் நீர்த்தேக்கங்களில் இருந்து கச்சா எண்ணெயை மீட்க உள்நாட்டு முறைகளை உருவாக்குவதாகும். புதிய முறைகளைப் பயன்படுத்தும்போது எண்ணெய் கலவை, தண்ணீரில் உப்பு அளவு, கச்சா எண்ணெயின் அமிலத்தன்மை, ராக் கனிமப்பொருள், இதர காரணிகளால் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளின் மாற்றத்தினையும் கணிக்க வேண்டியுள்ளது. புதிய முறையை பின்பற்றும்போது எண்ணெய் குழாயில் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் பிரித்தெடுக்க முடியும்” என கூறினார்.