சென்னை: சென்னை ஐஐடியின் புதிய தொழில் நுட்பம், நிலநடுக்க அதிர்வலைகளின் துல்லியமான நேரத்தை மதிப்பிடுவது, ஒரு வலுவான ஆரம்ப எச்சரிக்கை அமைப்பை உருவாக்குவதுடன், சுமார் 30 விநாடிகள் முதல் 2 நிமிடங்கள் வரை தற்காத்துக் கொள்வதற்குத் தயார் செய்து கொள்ள நேரத்தையும் வழங்குகிறது.
பூமியின் மேற்பரப்பு வரை அலைகள் தாக்குவதற்கு முன் கிடைக்கும் இந்த நேரம் மிகவும் பயனளிக்கக்கூடியது. நிலநடுக்கத்தைக் கண்டறிந்து தெரிவிப்பதற்கான நேரம் குறைவானதாகத் தோன்றினாலும், அணு உலைகள், மெட்ரோ போன்ற போக்குவரத்து, உயர் கட்டடங்களில் உள்ள லிப்ட்கள் ஆகியவற்றை நிறுத்தவும் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றவும் இந்த காலம் போதுமானது.
சென்னை ஐஐடியின் கெமிக்கல் பொறியல் துறை பேராசிரியர் அருண் கே தங்கிராலா வழிகாட்டுதலில், ஆராய்ச்சி மாணவி காஞ்சன் அகர்வால் ஆய்வுகளை மேற்கொண்டார்.
இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் புகழ்பெற்ற சக மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் இதழான PLOS ONEஇல் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவி காஞ்சன் அகர்வால், "பி-அலை வருகை குறித்த தகவல், நிலநடுக்கத்தின் அளவு, ஆழம் மற்றும் மையப்புள்ளி, இடம் போன்ற பிற மூல அளவு உருக்களைத் தீர்மானிப்பதில் முக்கியமானது.
எனவே, பி-அலை கண்டறிதல் சிக்கலுக்கு உறுதியான, துல்லியமான தீர்வாக அமையும். நிலநடுக்க விவரங்களைச் சரியாக மதிப்பிடுவதற்கும், நிலநடுக்கம் அல்லது பிற தூண்டப்பட்ட நிகழ்வுகளால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கும் அவசியம்" எனத் தெரிவித்துள்ளார்.
நில அதிர்வு
முக்கியமாக கடலில் அலைகள், பூமியின் மேலோட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள், வளிமண்டல மாறுபாடுகள் மற்றும் மனிதச் செயல்பாடுகள் காரணமாக நிலம் தொடர்ந்து அதிர்வடைகிறது.
நில அதிர்வு சமிக்ஞைகள் இயற்கையான (நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், சுனாமி போன்றவை) அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட (அதிக போக்குவரத்து, அணு வெடிப்புகள், சுரங்க நடவடிக்கைகள் போன்றவை) மூலங்களிலிருந்து உருவாக்கப்படலாம்.
அனைத்து நில அதிர்வு நிகழ்வுகளும் அவற்றின் அளவிற்கு விகிதாசாரமான ஆற்றலை வெளியிடுகின்றன.
வெளியிடப்பட்ட இந்த ஆற்றல், ஒரு அலையாக அனைத்து திசைகளிலும் நகர்ந்து, ஒரு நில அதிர்வு அளவி மூலம் நில அதிர்வு சமிக்ஞையாகப் பதிவு செய்யப்படுகிறது. சீஸ்மோகிராம்கள் என்பது நில அதிர்வு இயக்கத்தினை பதிவு செய்யும் வரைபடங்களாகும்.
இந்த நில அதிர்வு வரைபடங்களின் பகுப்பாய்வு, பூமியின் செயல்பாட்டைப் புரிந்துகொள்வதற்கும், நிலநடுக்கங்களுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை அமைப்பதற்கும், மூல இடங்களைத் தீர்மானிப்பதற்கும் , பிற நில அதிர்வு நிகழ்வுகளின் மூலத்தைக் கண்டறிவதற்கும் இன்றியமையாதது.
நிலநடுக்கத்தின் சேதப் பகுதியைக் கண்டறிவது அல்லது கணிப்பது உயிர்களைப் பாதுகாப்பதிலும் சொத்து இழப்பைத் தடுப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.
இதையும் படிங்க: மயங்கி கிடந்த இளைஞரை தோளில் சுமந்து காத்த பெண் போலீஸ்