சென்னை: சென்னை சாந்தோம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குயில் தோட்டம் திட்டப் பகுதியில் குடியிருப்பு தாரர்களுக்கு மறுகுடியமர்வு செய்வதற்கான கருணைத் தொகையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
இந்நிகழ்வில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ், சட்டப்பேரவை உறுப்பினர் மயிலை த.வேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், “நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், சென்னையில் புதிதாக 7500 வீடுகள் கட்டுவதற்கு 1500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சாந்தோம் குயில்தோட்டம் பகுதியில் 348 புதிய வீடுகள் ரூ.56.81 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகின்றன. ஏற்கனவே வசித்து வரும் அனைவருக்கும் இதே பகுதியில் வீடுகள் வழங்கப்படுகின்றன. 15 மாதத்தில் 410 சதுர அடியில் வீடுகள் அடியில் கட்டித்தரப்படும்.
குடியிருப்பு தாரர்களுக்கு மறுகுடியமர்வு செய்வதற்கான கருணைத் தொகை கடந்த ஆட்சியில் 8 ஆயிரம் வழங்கப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தற்போது 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 30 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
விரைவில் பழைய வீடுகளை இடித்து புதிதாக வீடுகள் கட்டப்படும். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்படும் கட்டடங்கள் அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு 50 ஆண்டுகள் நீடித்து நிலைக்கும் வகையில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
9 மாதத்தில் 3 மூதலீட்டார்கள் மாநாடு நடத்தி 89 ஆயிரம் கோடி அந்நிய முதலீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்துள்ளார். தற்போது துபாய் சென்று பல தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யவுள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் அரசாக திமுக அரசு உள்ளது. புதிய வீடுகள் கேட்பவர்களின் மனுக்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க:காணி நிலம் கூட இல்லாத காணி பழங்குடி: நடவடிக்கை எடுக்கும் நெல்லை கலெக்டர்!