ஆவடி மாநகராட்சி கோனாம்பேடு கிராமத்தில் உள்ள இரண்டு குளங்களை ஆக்கிரமித்து 15 வீடுகள், ஒரு வழிபாட்டுத்தலம், ஏழு கடைகள் கட்டப்பட்டுள்ளதை அகற்றக்கோரி, அதேப் பகுதியைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். சட்டவிரோதமாக குளங்களிலிருந்து லாரிகள் மூலம் தண்ணீர் திருடுவதைத் தடுக்கக் கோரியும் மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எட்டு வார காலத்திற்குள் அந்த இடத்தைப் பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், ஆவடி மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள், கடந்த 10 ஆண்டுகளில் தண்ணீர் லாரிகள் மூலம் ஏற்பட்ட விபத்துகள், இறப்புகள் எத்தனை? சட்டவிரோதமாக ஓடும் தண்ணீர் லாரிகள் எத்தனை? அவற்றை இயக்குபவர்கள் முறையான ஓட்டுநர்கள்தானா? ஒருநாளில் சென்னை மாநகரத்தில் ஓடும் தண்ணீர் லாரிகளின் எண்ணிக்கை என்ன? போன்ற கேள்விகளுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை என்றும், எனவே அனைத்து கேள்விகளுக்கும் உரிய பதிலளிக்க அரசிற்கு உத்தரவிட்டு வழக்கினை இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 'மெட்ராஸ் உயர் நீதிமன்றப் பெயரை மாற்றுங்கள்' - நாடாளுமன்றத்தில் முழங்கிய வைகோ