சென்னை: கரோனா காலத்தில் தெரு விலங்குகளின் உணவு, குடிநீர் தேவை குறித்து சிவா என்பவர் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தாக்கல் செய்த அறிக்கையில், 'நாய்களுக்கு 2500 கிலோ வழங்கப்பட்டு, அவற்றை வழங்க 500 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 104 குதிரைகளுக்கு 3,536 கிலோ கோதுமை வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மூன்று வாரம் தள்ளிவைப்பு
விலங்குகளுக்கு உணவு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட கணக்கில் 19 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் இருப்பிலிருந்து, சென்னை மாநகராட்சிக்கு 7 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயும், பிற 14 மாநகராட்சிகளுக்கு 11 லட்சத்து 84 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான விஞ்ஞானப்பூர்வ, மனிதாபிமான அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
கொண்டாட்டங்களுக்கான நேரமில்லை
பின்னர், தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம், 'ஊரடங்கில் தளர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், வெளியில் நிலவும் நடைமுறைகளை பார்க்கும்போது ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டது போல பொதுமக்கள் நடந்துகொள்வதாக தெரிகிறதாகவும், இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை' எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர், கரோனா முதல் அலை ஊரடங்கில் காவல்துறை மிகவும் கடுமையாக நடந்துகொண்டதால் பல இடங்களில் பிரச்சினை ஏற்பட்டது. அதனால் தற்போது கடுமைகாட்ட வேண்டாம் என காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இதை பொதுமக்கள் சாதகமாக எடுத்துக்கொண்டது, வெளியில் வருவதற்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்தார்.
அரசுக்கு அறிவுரை
இதற்கு நீதிபதிகள், 'ஊரடங்கு காலத்தில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க வேண்டும். மக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களை குறைப்பதற்காகவே தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது என்பதை மக்கள் உணரும் வகையிலும், தேவையில்லாமல் வெளியில் சுற்றித்தியக்கூடாது எனவும் ஒலிபெருக்கிகள் மூலம் தமிழ்நாடு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்' என அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: ஆளுநரைச் சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்