சென்னை புறநகரில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் படித்த லட்சுமி என்ற மாணவி, வேறு ஒரு தனியார் பல் மருத்துவ கல்லூரிக்கு இடமாறுதலுக்கு ஒப்புதல் கேட்டு விண்ணப்பம் செய்தார். இந்த விண்ணப்பத்தை இந்திய பல் மருத்துவ கவுன்சில் நிராகரித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மாணவி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி,பல் மருத்துவ கவுன்சில் உத்தரவை ரத்துசெய்து, மாணவியை கல்லூரியில் சேர்க்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய பல் மருத்துவ கவுன்சில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி, ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்குவந்தது.
அப்போது, இந்திய பல் மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் காஜா மொய்தீன் ஹிஸ்தி, பல் மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, இரண்டாம் ஆண்டு பல் மருத்துவ படிப்பின்போது மட்டுமே ஒரு கல்லூரியிலிருந்து மற்றொரு கல்லூரிக்கு மாணவர்கள் இடம் மாற முடியும்.
இந்த மாணவி மூன்றாம் ஆண்டு படிக்கும்போது, இடமாறுதலுக்கு ஒப்புதல் கேட்டார். அதனால் அவரது கோரிக்கையை கவுன்சில் நிராகரித்தது என்று வாதிட்டார்.
மேலும், இதுபோன்ற இடமாறுதல் பெறுவது என்பது மாணவர்களின் உரிமையாக கோர முடியாது. கல்விக் கட்டணம் செலுத்துபவர் மரணமடைதல் உள்ளிட்ட சில காரணங்களுக்காக மட்டுமே இடமாறுதலுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் வாதிட்டார்.
மாணவி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஓம் பிரகாஷ், வேறு வழியே இல்லாமல்தான் மாணவி வேறு ஒரு கல்லூரிக்கு இடமாறும் முடிவை எடுத்துள்ளார். கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் கல்லூரி நிர்வாகம் அதிக கட்டணம் கேட்டு தொந்தரவு செய்தது தொடர்பாக மாணவியின் தந்தை காவல் துறையில் புகார் செய்துள்ளார் என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், பல் மருத்துவ கவுன்சில் விதிகளின்படி இரண்டாம் ஆண்டு படிப்பின்போது மட்டுமே வேறு கல்லூரிக்கு இடமாறுதல் செய்ய முடியும் என்று கூறுகிறது.
எனவே, இந்த மாணவி இரண்டாம் ஆண்டு படிப்பில் வேறு ஒரு தனியார் கல்லூரியில் சேர விரும்பினால், மீண்டும் இதற்கு அனுமதி கேட்டு மாணவி மனு கொடுக்கவேண்டும்.
இந்த மனுவை நான்கு வாரங்களுக்குள் சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவை இந்திய பல் மருத்துவ கவுன்சில் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், கல்லூரி இடமாறுதல் தொடர்பாகபல் மருத்துவ கவுன்சில் விதிமுறைகள் கடுமையாக உள்ளது. இந்த வழக்கில் மாணவி வேறு ஒரு கல்லூரிக்கு இடமாறுதல் கேட்பது எதனால்? என்று விளக்கமாக காரணம் கூறி அவர் சார்பில் வாதிடப்பட்டது. எனவே, இதன் அடிப்படையில் பல் மருத்துவ விதிகளை இந்திய பல் மருத்துவ கவுன்சில் மறு ஆய்வு செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.