சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ (23) சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவர் மீது அதிமுக பேனர் விழுந்ததில் நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரது பின்னால் வந்துகொண்டிருந்த லாரி அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. இந்த சூழலில் இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தது.
இந்நிலையில், உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ. 5 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கை சென்னை மாநகர காவல் ஆணையர் கவனிப்பதோடு பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இழப்பீடை தமிழ்நாடு அரசு தற்போது வழங்கிவிட்டு விதிமீறல்களை கண்காணிக்காத அதிகாரிகளிடமிருந்து அதனை வசூலித்துக் கொள்ளலாம் என தெரிவித்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.