சென்னை:கோயில் நிலத்தைக் கண்டறிந்து, மீட்பதற்குத் தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை, அறநிலையத் துறை, உள்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனரான ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், சென்னை போரூரை அடுத்த நந்தம்பாக்கத்தில் உள்ள அருள்மிகு கோதண்டராமர் கோயிலுக்குச் சொந்தமாக 150 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் உள்ளதாகவும், அவற்றைப் போலி ஆவணங்களைக் கொண்டு தங்கள் பெயருக்கு மாற்றும் வகையில் நில அபகரிப்பாளர்கள் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றைத் தடுக்கக்கோரி தான் அளித்தப் புகாரில் உரியக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
நிலங்களை மீட்க கால அவகாசம்
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கையில் அடிப்படையில் வருவாய்த் துறை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், நில உரிமையாளர் என உரிமைகோருவோரின் ஆவணங்களும் சரிபார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு, இந்தப் பணிகளை முடித்து கோயில் நிலங்களை மீட்பதற்குக் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, கோயில் நில ஆவணங்களை ஆராய்ந்து கணக்கெடுத்து மீட்பதற்கும் அபகரிப்பாளர்கள் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கும் தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை, அறநிலையத் துறை, உள்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி நந்தம்பாக்கம் கோதண்டராமர் கோயில் நில விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த உரிய அலுவலர்கள் அடங்கிய கூட்டத்தை 6 வாரங்களில் கூட்ட வேண்டுமெனவும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நிலங்கள் மீட்பதற்கான சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டு ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கை நீதிபதி முடித்துவைத்தார்.
இதையும் படிங்க:Tamilnadu School Public Exams on May:மே மாதத்தில் பொதுத்தேர்வு- அமைச்சர் அன்பில் மகேஷ்