சென்னை: தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள சிலைகளை மூன்று மாதங்களில் அகற்ற வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், "பொதுமக்கள் உரிமைகளைப் பாதிக்காத வகையில் சிலைகள், கட்டுமானங்களை அமைக்க அனுமதி வழங்குவது தொடர்பாக விரிவான விதிகளை தமிழ்நாடு அரசு வகுக்க வேண்டும். சாலைகள், பொது இடங்களில் இருக்கும் தலைவர் சிலைகளைப் பராமரிக்க தமிழ்நாட்டில் தலைவர் பூங்கா உருவாக்க வேண்டும்.
சாதி ரீதியாக அடையாளப்படுத்தக் கூடாது
அரசியல் கட்சிகள், மதம், சாதி, மொழி சார்ந்த அமைப்புகள் தங்கள் விருப்பப்படி சிலைகளை அமைக்கின்றனர். சமுதாயத்திற்காகத் தியாகம் செய்த தலைவர்களை எந்த ஒரு தருணத்திலும் சாதி ரீதியாக அடையாளப்படுத்தக் கூடாது.
இந்நிலையில், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள சிலைகளை மூன்று மாதங்களில் அகற்ற வேண்டும்.
மேலும், பொது இடங்கள், சாலைகளில் சிலைகள் வைப்பதைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும், இல்லையென்றால் மக்கள் மனத்தில் தற்போது நிலவும் அச்சத்தைப் போக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.