சென்னை: டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூடியூப் சேனல் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக மதன் என்பவர் மீது புகார் எழுந்தது. அதனடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மதன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, மதன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனது செயல்பாடுகளால் மாநிலத்தின் சட்டம் – ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பப்ஜி விளையாடுவது ஒருபோதும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் செயல் எனக் கூற முடியாது. தான் விளையாடியது இந்திய அரசால் தடை செய்யப்படாத கொரிய பப்ஜி விளையாட்டு எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தொழில் போட்டியாளர்கள், தனது வீடியோவை எடிட் செய்து பதிவேற்றம் செய்துள்ளதாகவும், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் தனக்கு முறையாக வழங்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு, நீதிபதி பி.என். பிரகாஷ் மற்றும் ஏ.ஏ.நக்கீரன் அமர்வில் இன்று (ஏப்ரல் 25) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் குன்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த போது அளித்த கோரிக்கை மனுவை அரசும், காவல்துறையும் உரிய காலத்தில் பரிசீலிக்க வில்லை. எனவே மதனுக்கு எதிரான குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பளித்துள்ளனர்.
இதையும் படிங்க: துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்!