சென்னை: வளசரவாக்கத்தில் பள்ளி வாகனம் மோதி 2ஆம் வகுப்பு மாணவன் தீக்சித், பள்ளி வளாகத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, மாணவனின் தாயார் ஜெனிபர் இன்று (மார்ச் 29) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "குழந்தையை புதைப்பதற்கு கூட இடம் மறுக்கப்பட்டது. காவல்துறை உயர் அலுவலர் தலையீட்டுக்குப் பிறகுதான் இடம் கொடுத்தனர்.
நான் கிறிஸ்துவர், எனது கணவர் ஒரு இந்து. நான் சிஎஸ்ஐ மதுரை சர்ச்சுக்கு சென்றுகொண்டிருந்தேன். என் குழந்தைக்கு கிறிஸ்தவ மதம் மிகவும் பிடிக்கும். குழந்தைக்குப் பிடிக்கும் என்பதால் அவனை அருகில் உள்ள சர்ச்சில் புதைக்கலாம் என்று இடம் கேட்டோம். ஆனால், அவர்கள் கொடுக்கவில்லை.
நான் சிஎஸ்ஐ தான் என்ற சான்றும், சந்தா பணமும் கேட்கின்றனர். குழந்தையைப் புதைக்க ஒரு இடம் கொடுக்கவில்லை என்றால் என்ன கிறிஸ்தவ மதம் அது. எனது தாயார் இறந்த போதும் சிஎஸ்ஐ, ஆர்சி என்று இறுதிச்சடங்கு செய்யக் கூட பாதிரியார்கள் வரவில்லை. புதைப்பதற்குக்கூட சந்தா கட்டு, சந்தா கட்டு என்று கேட்கும்போது, கிறிஸ்தவர் என்று சொல்லவே அசிங்கமாக இருக்கிறது.
காவல்துறை உயர் அலுவலர் தலையிட்டு இடம் கிடைத்துள்ளது. கிறிஸ்து என்ற பெயரில் ஆர்சி, சிஎஸ்ஐ எனப் பிரித்து, பிரித்து இவர்கள் செய்வது அசிங்கமாக உள்ளது" எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பேருந்து விபத்தில் இறந்த மாணவரின் தாயாருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்