சென்னை புதுவண்ணாரப்பேட்டை வ.ஊ.சி நகர் சேனியம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வரும் வாசு என்பவர் கடன் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீதர் ஆட்டோ ஓட்டிய பின் வீட்டுக்கு செல்லும் வழியில் அவரை வழிமறித்த வாசு, கொடுத்த கடன் ரூ.2500 கேட்டுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தில் கோபமடைந்த வாசு அருகிலிருந்த 25 லிட்டர் காலி தண்ணீர் கேனை எடுத்து ஸ்ரீதரை அடித்துள்ளார். இதில் கீழே விழுந்த ஸ்ரீதர் தலையில் அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இதனையடுத்து, ஸ்ரீதரை அவரது தனுஷ் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார். பின்பு நேற்று காலை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஸ்ரீதர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வாசுவை கைது செய்து மத்திய புழல் சிறையில் அடைத்தனர்.