சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தீநுண்மி தொற்றைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மாநகராட்சி சார்பில் அனைத்துப் பகுதிகளிலும் நவீன இயந்திரங்களைக் கொண்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுவருகிறது.
குறிப்பாக தொற்று கண்டறியப்பட்டவர்கள் வீடு உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒரு நாளைக்கு இருமுறை கிருமிநாசினி கொண்டு சுத்தம்செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இயங்கும் அனுமதிக்கப்பட்ட மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வங்கிகள், அத்தியாவசிய தேவைகளுக்காக இயங்கும் அலுவலகங்களில் நாள்தோறும் இருமுறை கிருமிநாசினி கொண்டு சுத்தம்செய்யப்பட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவருடைய அறிவிப்பில், “ஏடிஎம் மையங்களில் ஒரு நபர் பயன்படுத்திய பின்னர் உடனடியாகக் கிருமிநாசினி கொண்டு சுத்தம்செய்யப்பட வேண்டும். அலுவலகங்களில் பணிக்கு வருபவர்கள் முகத்திரை, தகுந்த இடைவெளி கடைப்பிடித்தல், கிருமிநாசினி அல்லது சோப்பு பயன்படுத்தி கைகளைச் சுத்தமாகக் கழுவுதல் ஆகியவற்றை அந்தந்த நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
கிருமிநாசினி கொண்டு சுத்தம்செய்யும் பணிக்காகத் தனியாகப் பணியாளர்களை அந்தந்த நிறுவனங்களே நியமிக்க வேண்டும். தங்களின் அலுவலகம், கிருமிநாசினி இயந்திரங்கள், பணியாளர்கள் குறித்த விவரங்களை, சென்னை மாநகராட்சி வருவாய் அலுவலருக்கு ’arohqprop@gmail.com’ என்ற மின்னஞ்சல் முகவரியிலும், ’9445190742’ என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தெரிவிக்க வேண்டும்.
அனைத்து அலுவலகங்களிலும் அடிக்கடி பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆய்வுமேற்கொள்வர். அறிவுரைகளைத் தவிர்க்கும் நிறுவனங்கள் மீது தொற்று நோய் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அலுவலகங்கள் பூட்டி சீல்வைக்கப்படும்“ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோயம்பேடு மலர் சந்தை வியாபாரிகள் மே 3 வரை கடையடைப்பு!