சென்னை புளியந்தோப்புப் பகுதியில் கரோனா தொற்று குறித்து மாநகராட்சியுடன் இணைந்து தன்னார்வலர்கள் நடத்தும் விழிப்புணர்வு பேரணியை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று (ஜூன் 27) தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இது குறித்து அவர் பேசியதாவது; 'மே 8ஆம் தேதி முதல் ஜூன் 26 ஆம் தேதிவரை மொத்தம் 15 மண்டலங்களிலும் சேர்த்து 8,426 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. அதில் 5,48,989 நபர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் 20,443 நபர்களுக்கு சிறு அறிகுறி இருந்ததால் அவர்களை அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் 16,845 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. வார்டுக்கு இரண்டு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. கரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் மூன்று முதல் நான்கு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டப் பகுதிகளில் 140 மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.
இந்த 140 சுகாதார நிலையங்களிலும் பரிசோதனை செய்வதுடன் வழக்கமாக செய்யும் தடுப்பூசி, கர்ப்பிணி பெண்களுக்கு மாத்திரை வழங்குவது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து மருத்துவ முகாம்களிலும் தினமும் காலை, நண்பகல் நேரங்களில் சோதனைகள் நடைபெறுகிறது. மருத்துவ முகாம்கள் நடைபெறுவதால் நோய்ப் பரவலை வெகுவாக குறைக்க முடியும்.
மேலும் குடிசைவாழ் பகுதியிலும், குறுகிய பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு தன்னார்வலர்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். எனவே, மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வின் மூலமாக பல பகுதிகளில் 95 விழுக்காடு நோய்த்தொற்று பரவல் குறைந்துள்ளது.
சென்னையில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 10,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பரிசோதனை அதிகம் செய்வதால் தான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
மேலும் 97 சிறப்பு ரயில்கள் மூலம் மாநகராட்சி முகாம்களில் தங்க வைத்திருந்த 1,31,785 பிற மாநிலத் தொழிலாளர்களை பாதுகாப்பாக அனுப்பியிருக்கிறோம். மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலையில் மட்டுமே மாநகராட்சி முகக் கவசம் வாங்கியுள்ளது. 20,000 தூய்மைப் பணியாளர்கள், வீடு வீடாக பரிசோதனை செய்யும் 12,000 தன்னார்வலர்கள், பிற மாநகராட்சி ஊழியர்களுக்கு என தினமும் சென்னை மாநகராட்சிக்கு மட்டும் 40 முதல் 45 ஆயிரம் முகக் கவசங்கள் தேவைப்படுகின்றன.
ஒரு மாதத்திற்கு 13 முதல் 15 லட்சம் முகக்கவசங்கள் தேவைப்படுகின்றன. குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு 50 லட்சம் முகக் கவசங்கள் வழங்கும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அதில் 45 லட்சம் கவசங்கள் ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது ஐந்து லட்சம் முகக்கவசங்களை வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மருத்துவ முகாம்களில் இருக்கும் அனைத்து பணியாளர்களுக்கும் N95 முகக் கவசம், பிபிஇ கிட் வழங்கியிருக்கிறோம்.
மேலும் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு மாநகராட்சி சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஊடகத்தில் பணிபுரியும் அனைவரும் முகக் கவசம் அணியவேண்டும். களப்பணியில் இருக்கும்போது பாதுகாப்புடன் இருக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.