கரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கரோனா வைரஸ் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளதால், படிப்படியாக பொதுப்போக்குவரத்து இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்று (டிச.23) முதல் சென்னை புறநகர் மின்சார ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
‘பீக் நேரம்’ என சொல்லப்படும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், இரவு 4.30 மணி முதல் 7 மணி வரையும் பொதுமக்கள் ரயில் சேவையை பயன்படுத்த தடை நீடிக்கிறது. சென்னையைப் பொருத்தவரை ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் புறநகர் மின்சார ரயிலைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அதிக அளவில் கூட்ட நெரிசல் இருக்கும் இந்த நேரங்களில் கரோனா தொற்று பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால் சென்னையில் மின்சார ரயில் இயக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், பொதுமக்களின் தொடர் கோரிக்கைகளை ஏற்று பொதுமக்கள் வசதிகளுக்காக இன்று (டிச.23) முதல் மின்சார ரயில்கள் இயக்கப்படுவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று (டிச.22) அறிவிப்பு வெளியிட்டார். தற்போது 410 ரயில்கள், அதாவது 65 சதவிகிதப் புறநகர் மின்சார ரயில்கள் சென்னையில் இயக்கப்பட்டு வருகின்றன. முதல் நாளான இன்று பொது மக்கள் கூட்டம் குறைவாகக் காணப்பட்டது.
பள்ளி, கல்லூரிகள் இன்னும் முழுவதுமாக திறக்கப்படாத நிலையில், மின்சார ரயிலில் குறைவான கட்டணம் என்பதால் வேலைக்குச் செல்லும் ஊழியர்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க...இளநிலை கால்நடை மருத்துவக் கலந்தாய்வு தொடக்கம்