சென்னை திருவொற்றியூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 60 வயதான தங்கசெல்வம் என்பவர், கடந்த 20ஆம் தேதி திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக ஷேர் ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், வழி கேட்பது போல அவரது கவனத்தை திசை திருப்பி, அவரது செல்போனை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
இதேபோல், சென்னை எண்ணூர், காசிமேடு, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முதியவர்களை குறிவைத்து செல்போன் திருட்டு நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இதையடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
தங்கசெல்வத்திடம் செல்போன் திருடப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி, திருவொற்றியூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ரமேஷ் இருவரும் செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து மூன்று செல்போன்கள் மற்றும் ஷேர் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். விசாரணையில், இவர்கள் வடசென்னை பகுதிகளில் ஆட்டோவில் சென்று பொதுமக்களிடம் முகவரி கேட்பது போல் நடித்து, அவர்களை ஆட்டோவில் ஏற்றிச் சென்று கவனத்தை திசைதிருப்பி, செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
கைது செய்த இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.