2011 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த தற்போதைய திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இரண்டு கோடியே 80 லட்சம் ரூபாய் வரை பெற்று பலரிடம் மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில், நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் ஆகிய நால்வர் மீது மத்தியக் குற்றப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். செந்தில் பாலாஜி சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால் எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.
இந்த மோசடி வழக்கில் மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை முன்னாள் இயக்குநர் கணேசன், கடந்த நவம்பர் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த 40 நாள்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கணேசன், பிணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவானது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் முன் இன்று (டிச.17) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், “போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் அளிக்கப்பட்ட புகார்களில் கணேசனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் புகாரை புதுப்பிக்க முடியாது” என வாதிட்டார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஏ. நடராஜன் கூறுகையில், “வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கிய குற்றச்சாட்டு மட்டுமல்லாமல், அதிகாரம் இல்லாமல் சட்ட விரோதமாக பணி நியமன உத்தரவுகளை கணேசன் வழங்கியிருக்கிறார். இவரை போன்றவர்களால் பணம் கொடுத்த அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கணேசனுக்கு பிணை வழங்கக் கூடாது” என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, “வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போல், குற்றத்திற்கு துணை போனவர்கள் என்ற அடிப்படையில் பணம் கொடுப்பவர்களையும் விசாரிக்க வேண்டும். அவர்களை அப்பாவிகள் என்று சொல்லக்கூடாது. கணேசனுக்கு பிணை வழங்குவது தொடர்பாக பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க : ஆசிரியர் தேர்வு முறைகேடு! - விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைப்பு!