சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாகச் சுங்கத் துறை அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து விமான நிலையத்தில் சுங்கத் துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கொழும்புவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம்செய்த அகமது கனி, தமீம் அன்சாரி, ரகுமான் கான் என்ற மூன்று பேரை சந்தேகத்தின்பேரில் சுங்கத் துறை அலுவலர்கள் பிடித்து சோதனை செய்தபோது, உள்ளாடைக்குள் மறைத்துவைத்திருந்த 33 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 766 கிராம் தங்கத்தைக் கைப்பற்றினார்கள்.
இதேபோல் கொழும்பிலிருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த இலங்கையைச் சேர்ந்த முகமது நஸ்லீன், அப்துல்லா ஆகிய 2 பேரையும் சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து ரூ. 25 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 577 கிராம் தங்கத்தைக் கைப்பற்றினார்கள்.
மேலும் கொழும்பிலிருந்த விமானத்தில் பயணம்செய்த சென்னையைச் சேர்ந்த சுல்பீகர் அலி என்பவரிடமிருந்து ரூ.12 லட்சத்து 82 ஆயிரம் மதிப்புள்ள 292 கிராம் தங்கத்தை சுங்கத் துறை அலுவலர்கள் கைப்பற்றினர்.
இதன்மூலம் கொழும்புவிலிருந்து 6 பேர் கடத்திவந்த தங்கத்தின் மதிப்பு சுமார் 71 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 635 கிராம் தங்கம் என சுங்க அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். பிடிபட்ட 6 பேரிடம் சுங்கத் துறை அலுவலர்கள் தீவிர விசாரனை மேற்கொண்டுவருகின்றனர். ஒரே நாளில் சென்னை விமான நிலையத்திற்கு ஆறு பேர் தங்கம் கடத்திவந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க:நாகரசம்பட்டியில் மூன்று வீடுகளில் ரூ.25 லட்சம் தங்க நகைகள் கொள்ளை