பள்ளிகள் திறந்தவுடன் அந்த கல்வியாண்டில் மார்ச் மாதம் நடைபெறும் பொதுத்தேர்விற்கான கால அட்டவணை கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியிடப்பட்டுவந்தது. ஆனால் இம்முறை பள்ளிகள் தொடங்கப்பட்ட பின்பும் தற்போது வரை பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படாமல் உள்ளது. தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டுவர இருப்பதன் காரணமாகவே அட்டவணைகள் வெளியிடப்படவில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
வரும் கல்வியாண்டில் 11, 12ஆம் வகுப்புகளில் உயர் கல்வியில் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தனிப்பாடப்பிரிவு, மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களுக்கு தனிப்பாடப் பிரிவு, பொறியியல் பயில விரும்பும் மாணவர் உயிரியல் படிக்கத் தேவையில்லை என்ற முறையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.
அதன்படி தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய ஐந்து பாடங்கள் இடம்பெறும். மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் கணக்குப்பாடம் பயில தேவையில்லை.
தமிழ், ஆங்கிலம், வேதியியல், இயற்பியல், உயிரியியல் ஆகிய ஐந்து பாடங்கள் பயின்றால் போதுமானது. எனவே தற்போது நடைமுறையில் உள்ள 600 மதிப்பெண்ணை, மேலும் குறைத்து 500 மதிபெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். மேலும், பத்தாம் வகுப்பில் தற்போது நடைமுறையில் உள்ள மொழிப்பாடங்கள் இரண்டு தாள்களிலிருந்து ஒன்றாக குறைப்பது போன்ற பரிசீலனைகளை பள்ளிக் கல்வித் துறை செய்துவருகிறது.
இது குறித்துக் கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுத்தப்பின்னர் விரைவில் புதிய முறையுடன் கால அட்டவணையை வெளியிட பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. முன்னதாக மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த 2017 -2018ஆம் கல்வியாண்டு முதல் பதினோறாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கொண்டுவரப்பட்டது.
அதன்படி 11ஆம் வகுப்பில் 600 மதிப்பெண்களும், 12ஆம் வகுப்பில் 600 மதிப்பெண்களும் பெற வேண்டும் என பிரித்து தேர்வுகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.