இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகத் தொடர்ந்து அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது.
இதன்காரணமாக இன்று (டிச. 07) ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான இடி மின்னலுடன்கூடிய மழையும் பெய்யக்கூடும்.
சென்னை, புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான இடி மின்னலுடன்கூடிய மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்ஸியசையும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு-பகுதி, கேரள கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.